சனி, 6 அக்டோபர், 2012

கோவை திரு. ஜெ. வீரநாதன் உள்ளிட்ட 16 படைப்பாளிகளுக்கு கு.சி.பா. அறக்கட்டளை விருது அளிப்பு



கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலக ஆசிரியர் திரு. ஜெ. வீரநாதன், சென்னை ஜெம் கிரானைட்ஸ் அதிபர் திரு. வீரமணி அவர்களிடமிருந்து நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் கணினித் தமிழ் நூல் விருது பெறுகிறார். தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன், எழுத்தாளர் திரு. கு. சின்னப்பபாரதி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி. சுப்ரமணியன், அறக்கட்டளை தலைவர் மற்றும் கல்லூரி தாளாளர் டாக்டர் பொ. செல்வராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.
நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், கு. சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை சார்பில், 16 படைப்பாளிகளுக்கு சிறப்பு விருதும், தலா ரூ.10,000 பொற்கிழியும் வழங்கப்பட்டன.
இந்த இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார்.
உலக சமுதாய சேவா சங்க சேலம் மண்டலத் தலைவர் உழவன் ம.தங்கவேல், சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளைச் செயலர் கா.பழனிச்சாமி தொடக்க உரையாற்றினார். விழாவில், முதன்மை விருதுடன், ரூ.1.50 லட்சம் பொற்கிழி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது. விருதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், சிறந்த நூல்கள் எழுதிய வகையில் சிறுகதைப் பிரிவில் (அடைப்புக் குறிக்குள் நூல்களின் பெயர்கள்), கனடாவைச் சேர்ந்த அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் (கூடுகள் சிதைந்த போது), சிங்கப்பூர் மா.அன்பழகன் (என் வானம் நான் மேகம்), கவிதைப் பிரிவில் நாமக்கல் கா.ஜெய்கணேஷ் (நட்பின் முகவரி), பிரான்ஸ் பத்மாராணி இளங்கோவன் (சிறுவர் இலக்கியம்), இலங்கை டாக்டர் ஓ.கே.குணநாதன் (பறக்கும் ஆமை), நாவல் பிரிவில் கன்னியாகுமரி மலர்விழி (தூப்புக்காரி), அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிங்காரவடிவேல் (ஆத்தா கல்லறையில் ஒரு ஆவாரஞ்செடி), கட்டுரைப் பிரிவில் ஈரோடு புலவர் செ.ராசு (வாழ்நாள் சாதனை விருது), மலேசியா ராஜம் ராஜேந்திரன் (மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்), லண்டன் சிவ.தியாகராஜா (தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்), சிற்றிதழ் பிரிவில் இலங்கை கலாமணி பரணீதரன் (ஜீவநதி), கணினித் தமிழ்ப் பிரிவில் கோவை ஜெ.வீரநாதன் (இணையத்தை அறிவோம்), மொழி பெயர்ப்புப் பிரிவில் திருச்சி இலக்குவன் திருவரங்கம் (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - இஎம்எஸ் நம்பூதிரிபாட்), சென்னை ஆர்.சௌரிராஜன் (கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு), இலங்கை உபாலி லீலாரத்ன (கு.சி.பா. சர்க்கரை நூல் மொழி பெயர்ப்பு), உஸ்பெகிஸ்தான் லோலா.மக்துபா (கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு) ஆகிய 16 எழுத்தாளர்களுக்கு தலா 10 ஆயிரத்துடன் பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி வழங்கினார்.
இந்த விருதுகளுக்கு மொத்தம் 401 படைப்புகள் வரப்பெற்றதில் சிறந்த 16 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, விழா மலரை சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கே.முத்துச்செழியன் வெளியிட, அதை லண்டன் எழுத்தாளர் ரா.உதயணன் பெற்றுக் கொண்டார்.
மேலும், எழுத்தாளர் லோலாமக்துபா உஸ்பெகிஸ்தான் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பாவின் "பவளாயி' புதினத்தின் முதல் பிரதியை புதுதில்லி மொழி பெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

உபாலி லீலாரத்னா சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பா.வின் "சர்க்கரை' என்னும் புதினத்தின் முதல் பிரதியை இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா பெற்றுக் கொண்டார். இவ்விரு புதினங்களையும் நீதிபதி ராமசுப்பிரணியன் வெளியிட்டார். தொடர்ந்து, எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செல்வம் கல்வி நிறுவனங்களின் செயலர் கவீத்ராநந்தினி பாபு வரவேற்றார்.
அறக்கட்டளை உறுப்பினர் சி.ரங்கசாமி நன்றி கூறினார்.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நா.செந்தில்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.

புதன், 6 ஜூன், 2012

படைப்புக்கு மரியாதை!


தினமணி தலையங்கம்: படைப்புக்கு மரியாதை!

First Published : 25 May 2012 01:50:14 AM IST

நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு 2012ஆம் ஆண்டு நல்ல காலம் பிறந்திருக்கிறது. படைப்புரிமை சட்டத் திருத்தம்-2012 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமனதாக நிறைவேறியுள்ளது. திரைப்படத் துறையினரின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் இது. இதில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே விஷயம், இந்த நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான்.

திரைத்துறையில் ஒரு நடிகர் நடிக்கவும், பாடலாசிரியர் பாட்டு எழுதித் தரவும், இசையமைப்பாளர் இசை அமைத்துக் கொடுக்கவும் அவர்கள் கேட்கும் தொகை தயாரிப்பாளரால் அளிக்கப்பட்டுவிடுவதால், அது தொடர்பாக எந்த உரிமையும் படைப்பாளிகள் அல்லது நடிகர்களுக்கு இல்லை என்பதுதான் படைப்புரிமைச் சட்டம் 1957-ன்படி நடைமுறையாக இருந்தது. இப்போதைய சட்டம் இந்த நடைமுறையில் சிறு திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரு கலைஞன் அல்லது கவிஞன், இசைஞன் காலத்தால் கைவிடப்பட்டாலும், அவன் படைப்பு உயிர்ப்புடன் இருக்கும்வரை அக் கலைஞனுக்கு உரிமத் தொகை மிகச்சிறிய அளவாக இருந்தாலும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்தச் சிறந்த கலைஞன் வறுமையில் சாகமாட்டான். திரைப்படத் துறையில் பணியாற்றியவர்களால் எழுத்துலக படைப்பாளிகள் போல, உரிமத்தொகை பெற முடியாமல் இருந்துவந்த நிலைமை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

திரைப்படங்களைப் பொருத்தவரை, அதன் தயாரிப்பாளர் மட்டுமே உரிமை படைத்தவர் என்பதால், அந்தத் திரைப்படம் எத்தனை முறை, எத்தனை தியேட்டர்களில் ஓடினாலும் அவருக்குத்தான் லாபம். அந்தப் படத்தை சில ஆண்டுகள் கழித்து ரீ-பிரிண்ட் போட்டு ஓட்டினாலும் அவருக்கே அந்த லாபம் முழுவதும்.

உதாரணமாக, "கர்ணன்' படத்தை டிஜிட்டலாக மாற்றினாலும் அதன் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே சொந்தம். அல்லது தயாரிப்பாளரிடமிருந்து உலக விநியோக உரிமையை முழுவதுமாகப் பெற்ற விநியோகஸ்தருக்குச் சொந்தம். இதுதான் இன்று வரை உள்ள நிலைமை. இனி அப்படியல்ல. ஒரு படத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினாலும், கருப்பு - வெள்ளைப் படத்தை வண்ணமாக மாற்றினாலும், இணைய தளத்தில் வெளியிட்டாலும், அதாவது, திரைக்கு வெளியே எந்த வடிவம் கொண்டாலும், மாற்றம் பெற்றாலும், அதில் தொடர்புடைய கலைஞர்கள் உரிமத்தொகை பெறும் தகுதியுடைவர்கள் ஆகிறார்கள்.

வானொலி, தூர்தர்ஷனில் ஒலி, ஒளிபரப்பாகும் திரைப்பாடல்கள், ஒலிச் சித்திரம், திரைப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் குறித்து அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியன கணக்கு வைத்திருக்கின்றன. இவை பயன்படுத்தப்பட்ட மணித்துளிகளுக்கேற்ப, அதன் தயாரிப்பாளர்களுக்குக் காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் இந்த இரு நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை.

தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் பெருகிய பின்னர், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் தனியார் தொலைக்காட்சிகளே வாங்கி, அப்படத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் - பாடல், நகைச்சுவைக் காட்சி அல்லது முழு திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும், தங்கள் துணை சேனல்களிலும் ஒளிபரப்பும் புதிய வணிக முறை தோன்றியது.

ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.80 கோடி என்றாலும், அந்தப் படத்தை ரூ.100 கோடிக்கு வாங்கி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது அவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பல கோடி ரூபாய். இரண்டு ஒளிபரப்பில் இந்த ரூ.100 கோடியை மீட்டுவிட முடியும். ஆகவே, ஒரு படத்தின் பல காட்சிகளை, பாடலை பலமுறை ஒளிபரப்பி, விளம்பரங்கள் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கத் தனியார் தொலைக்காட்சிகளால் முடிந்தது.

தற்போது இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருப்பதன் மூலம், அத்தகைய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்களே அந்தப் படத்துக்கு உரிமை பெற்றவர்களாக இருந்தாலும்கூட, அதைத் திரையரங்கு அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்துவதால், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு உரிமத் தொகை தந்தே ஆக வேண்டும்.

இவ்வாறு திரை அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்தப்படும்போது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப, அதில் தொடர்புடைய கலைஞர்களுக்கும் தரப்பட வேண்டிய உரிமத் தொகையை காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்யும்போது, தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, அக்காட்சிகள் இடம்பெறும் ஸ்லாட்-ன் மொத்த விளம்பர வருவாயையும் கணக்கில்கொண்டு அதற்கேற்ப உரிமத்தொகையை (ராயல்டி) நிர்ணயிக்க வகை செய்தால், கலைஞர்களுக்கு ஓரளவு நியாயமான உரிமத்தொகை கிடைக்கும்.

படங்களை ரீ-மேக் செய்யும்போதும், பாடல்களை ரீ-மிக்ஸ் செய்யும்போதும்கூட தொடர்புடைய கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்களின் அனுமதி பெறவும் உரிமத்தொகை தரவும் வேண்டும் என்கின்றது சட்டம். திரைத்துறையினரை மனதில் கொண்டே இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து புதிய கதை கருவைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது வரை, கற்பனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது. புதிய கதையைப் படமாக்கும் துணிவு இல்லாத போக்கு தலைதூக்கி இருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்திருப்பது சுயசிந்தனையாளர்களின் திறமைக்குத் தரப்படும் மரியாதை. இருப்பினும் திரைத்துறையினரின் ஒற்றுமை மட்டுமே இந்தச் சட்டத்தை வலுவாக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

திங்கள், 26 மார்ச், 2012

திண்டுக்கல்லில் போட்டோஷாப் சிஎஸ்6 –

திண்டுக்கல்லில் போட்டோஷாப் சிஎஸ்6 –
இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்
திண்டுக்கல் பீஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்ஸ் அசோயேசன் இணைந்து தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். புகைப்படத்துறையினருக்காக நடத்தப்பட்ட பல்வேறு வகுப்புகளில், அடோபி போட்டோஷாப் சிஎஸ்5 மென்பொருளுக்காக 2 நாள் பயிற்சி வகுப்புகள் 23 மற்றும் 24, மார்ச், 2012 தேதிகளில் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலகத்தின் திரு. ஜெ.வீரநாதன் மற்றும் ஆசிரியை செல்வி ரேணுகாதேவி ஆகியோர் பயிற்சியளித்தனர். எல்சிடி புரஜெக்டர் உதவியுடன் பெரிய திரையில் போட்டோஷாப்பின் அனைத்து கருவிகள் கட்டளைகள் பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டது. கலந்துகொண்டவர்களின் எல்லா கேள்விகளுக்கும் செயல்முறையாக விளக்கம் தரப்பட்டது.
இரண்டு நாள் நிகழ்ச்சியின் துவக்கத்தில், ஜெ.வீரநாதன் எழுதி பதிப்பித்துள்ள போட்டோஷாப் சிஎஸ்6 என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத் தலைவர் திரு. ராஜராஜன் புத்தகத்தை வெளியிட துணைத் தலைவர் திரு. அர்ஜுனன் பெற்றுக்கொண்டார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தப் புத்தகம் சிறப்புத் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. பால்ராஜ் அவர்கள் நன்றிகூறினார். திண்டுக்கல் பீஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியின் திரு. பீ.எஸ்.வெங்கடேஷ்வரன் அவர்கள் இரண்டுநாள் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


 

திங்கள், 5 மார்ச், 2012

சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாராட்டு

சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாராட்டு
 
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறந்த அறிவியல் மற்றும் ஆன்மிக தமிழ் நூல்களுக்கு "ராமமூர்த்தி நினைவு விருது' பெற்றவர
 
சென்னை, மார்ச் 5: சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாரட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
 இதில் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதன் ஆசிரியர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.வி.பதியின் "மனதை மயக்கும் கண்ணனின் கதைகள்', ஜெ. வீரநாதனின் "எளிய தமிழில் இணையத்தை அறிவோம்', பி. முத்துகுமாரசுவாமியின் "நகரத்தார் கோயில்களில் ஒன்பது', வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் "எல்லோருக்கும் எப்போதும் உணவு' ஆகிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு "ராமமூர்த்தி நினைவு' விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, இந்தியா சிமெண்ட் நிறுவன துணைத் தலைவர் (நிதி) ஹரிஹர சுப்பிரமணியன், பவித்ரம் நிர்வாகி எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், கெüரவ ஆலோசகர் டாக்டர் ஜெ. ஜாய்ஸ் திலகம், நாடக ஆசிரியர் சி.வி. சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வியாழன், 1 மார்ச், 2012

நமது புத்தகத்திற்கு பரிசு

அன்புடையீர் வணக்கம்.நமது பயிலகம் வெளியிட்டுள்ள இணையத்தை அறிவோம் என்ற நூலுக்கு, அறிவியல் பிரிவில் சிறந்த நூலுக்காக சென்னை Pavithram Trust வழங்கும் Ramamurthi Memorial Award இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்‌ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்தப் புத்தகம், 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை புத்தக் கண்காட்சியில், முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ ஐயா அவர்களால் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்கள்.