சனி, 6 அக்டோபர், 2012

கோவை திரு. ஜெ. வீரநாதன் உள்ளிட்ட 16 படைப்பாளிகளுக்கு கு.சி.பா. அறக்கட்டளை விருது அளிப்பு



கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலக ஆசிரியர் திரு. ஜெ. வீரநாதன், சென்னை ஜெம் கிரானைட்ஸ் அதிபர் திரு. வீரமணி அவர்களிடமிருந்து நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் கணினித் தமிழ் நூல் விருது பெறுகிறார். தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன், எழுத்தாளர் திரு. கு. சின்னப்பபாரதி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி. சுப்ரமணியன், அறக்கட்டளை தலைவர் மற்றும் கல்லூரி தாளாளர் டாக்டர் பொ. செல்வராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.
நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், கு. சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை சார்பில், 16 படைப்பாளிகளுக்கு சிறப்பு விருதும், தலா ரூ.10,000 பொற்கிழியும் வழங்கப்பட்டன.
இந்த இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார்.
உலக சமுதாய சேவா சங்க சேலம் மண்டலத் தலைவர் உழவன் ம.தங்கவேல், சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளைச் செயலர் கா.பழனிச்சாமி தொடக்க உரையாற்றினார். விழாவில், முதன்மை விருதுடன், ரூ.1.50 லட்சம் பொற்கிழி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது. விருதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், சிறந்த நூல்கள் எழுதிய வகையில் சிறுகதைப் பிரிவில் (அடைப்புக் குறிக்குள் நூல்களின் பெயர்கள்), கனடாவைச் சேர்ந்த அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் (கூடுகள் சிதைந்த போது), சிங்கப்பூர் மா.அன்பழகன் (என் வானம் நான் மேகம்), கவிதைப் பிரிவில் நாமக்கல் கா.ஜெய்கணேஷ் (நட்பின் முகவரி), பிரான்ஸ் பத்மாராணி இளங்கோவன் (சிறுவர் இலக்கியம்), இலங்கை டாக்டர் ஓ.கே.குணநாதன் (பறக்கும் ஆமை), நாவல் பிரிவில் கன்னியாகுமரி மலர்விழி (தூப்புக்காரி), அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிங்காரவடிவேல் (ஆத்தா கல்லறையில் ஒரு ஆவாரஞ்செடி), கட்டுரைப் பிரிவில் ஈரோடு புலவர் செ.ராசு (வாழ்நாள் சாதனை விருது), மலேசியா ராஜம் ராஜேந்திரன் (மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்), லண்டன் சிவ.தியாகராஜா (தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்), சிற்றிதழ் பிரிவில் இலங்கை கலாமணி பரணீதரன் (ஜீவநதி), கணினித் தமிழ்ப் பிரிவில் கோவை ஜெ.வீரநாதன் (இணையத்தை அறிவோம்), மொழி பெயர்ப்புப் பிரிவில் திருச்சி இலக்குவன் திருவரங்கம் (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - இஎம்எஸ் நம்பூதிரிபாட்), சென்னை ஆர்.சௌரிராஜன் (கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு), இலங்கை உபாலி லீலாரத்ன (கு.சி.பா. சர்க்கரை நூல் மொழி பெயர்ப்பு), உஸ்பெகிஸ்தான் லோலா.மக்துபா (கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு) ஆகிய 16 எழுத்தாளர்களுக்கு தலா 10 ஆயிரத்துடன் பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி வழங்கினார்.
இந்த விருதுகளுக்கு மொத்தம் 401 படைப்புகள் வரப்பெற்றதில் சிறந்த 16 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, விழா மலரை சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கே.முத்துச்செழியன் வெளியிட, அதை லண்டன் எழுத்தாளர் ரா.உதயணன் பெற்றுக் கொண்டார்.
மேலும், எழுத்தாளர் லோலாமக்துபா உஸ்பெகிஸ்தான் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பாவின் "பவளாயி' புதினத்தின் முதல் பிரதியை புதுதில்லி மொழி பெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

உபாலி லீலாரத்னா சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பா.வின் "சர்க்கரை' என்னும் புதினத்தின் முதல் பிரதியை இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா பெற்றுக் கொண்டார். இவ்விரு புதினங்களையும் நீதிபதி ராமசுப்பிரணியன் வெளியிட்டார். தொடர்ந்து, எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செல்வம் கல்வி நிறுவனங்களின் செயலர் கவீத்ராநந்தினி பாபு வரவேற்றார்.
அறக்கட்டளை உறுப்பினர் சி.ரங்கசாமி நன்றி கூறினார்.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நா.செந்தில்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.

புதன், 6 ஜூன், 2012

படைப்புக்கு மரியாதை!


தினமணி தலையங்கம்: படைப்புக்கு மரியாதை!

First Published : 25 May 2012 01:50:14 AM IST

நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு 2012ஆம் ஆண்டு நல்ல காலம் பிறந்திருக்கிறது. படைப்புரிமை சட்டத் திருத்தம்-2012 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமனதாக நிறைவேறியுள்ளது. திரைப்படத் துறையினரின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் இது. இதில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே விஷயம், இந்த நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான்.

திரைத்துறையில் ஒரு நடிகர் நடிக்கவும், பாடலாசிரியர் பாட்டு எழுதித் தரவும், இசையமைப்பாளர் இசை அமைத்துக் கொடுக்கவும் அவர்கள் கேட்கும் தொகை தயாரிப்பாளரால் அளிக்கப்பட்டுவிடுவதால், அது தொடர்பாக எந்த உரிமையும் படைப்பாளிகள் அல்லது நடிகர்களுக்கு இல்லை என்பதுதான் படைப்புரிமைச் சட்டம் 1957-ன்படி நடைமுறையாக இருந்தது. இப்போதைய சட்டம் இந்த நடைமுறையில் சிறு திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரு கலைஞன் அல்லது கவிஞன், இசைஞன் காலத்தால் கைவிடப்பட்டாலும், அவன் படைப்பு உயிர்ப்புடன் இருக்கும்வரை அக் கலைஞனுக்கு உரிமத் தொகை மிகச்சிறிய அளவாக இருந்தாலும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்தச் சிறந்த கலைஞன் வறுமையில் சாகமாட்டான். திரைப்படத் துறையில் பணியாற்றியவர்களால் எழுத்துலக படைப்பாளிகள் போல, உரிமத்தொகை பெற முடியாமல் இருந்துவந்த நிலைமை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

திரைப்படங்களைப் பொருத்தவரை, அதன் தயாரிப்பாளர் மட்டுமே உரிமை படைத்தவர் என்பதால், அந்தத் திரைப்படம் எத்தனை முறை, எத்தனை தியேட்டர்களில் ஓடினாலும் அவருக்குத்தான் லாபம். அந்தப் படத்தை சில ஆண்டுகள் கழித்து ரீ-பிரிண்ட் போட்டு ஓட்டினாலும் அவருக்கே அந்த லாபம் முழுவதும்.

உதாரணமாக, "கர்ணன்' படத்தை டிஜிட்டலாக மாற்றினாலும் அதன் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே சொந்தம். அல்லது தயாரிப்பாளரிடமிருந்து உலக விநியோக உரிமையை முழுவதுமாகப் பெற்ற விநியோகஸ்தருக்குச் சொந்தம். இதுதான் இன்று வரை உள்ள நிலைமை. இனி அப்படியல்ல. ஒரு படத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினாலும், கருப்பு - வெள்ளைப் படத்தை வண்ணமாக மாற்றினாலும், இணைய தளத்தில் வெளியிட்டாலும், அதாவது, திரைக்கு வெளியே எந்த வடிவம் கொண்டாலும், மாற்றம் பெற்றாலும், அதில் தொடர்புடைய கலைஞர்கள் உரிமத்தொகை பெறும் தகுதியுடைவர்கள் ஆகிறார்கள்.

வானொலி, தூர்தர்ஷனில் ஒலி, ஒளிபரப்பாகும் திரைப்பாடல்கள், ஒலிச் சித்திரம், திரைப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் குறித்து அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியன கணக்கு வைத்திருக்கின்றன. இவை பயன்படுத்தப்பட்ட மணித்துளிகளுக்கேற்ப, அதன் தயாரிப்பாளர்களுக்குக் காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் இந்த இரு நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை.

தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் பெருகிய பின்னர், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் தனியார் தொலைக்காட்சிகளே வாங்கி, அப்படத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் - பாடல், நகைச்சுவைக் காட்சி அல்லது முழு திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும், தங்கள் துணை சேனல்களிலும் ஒளிபரப்பும் புதிய வணிக முறை தோன்றியது.

ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.80 கோடி என்றாலும், அந்தப் படத்தை ரூ.100 கோடிக்கு வாங்கி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது அவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பல கோடி ரூபாய். இரண்டு ஒளிபரப்பில் இந்த ரூ.100 கோடியை மீட்டுவிட முடியும். ஆகவே, ஒரு படத்தின் பல காட்சிகளை, பாடலை பலமுறை ஒளிபரப்பி, விளம்பரங்கள் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கத் தனியார் தொலைக்காட்சிகளால் முடிந்தது.

தற்போது இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருப்பதன் மூலம், அத்தகைய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்களே அந்தப் படத்துக்கு உரிமை பெற்றவர்களாக இருந்தாலும்கூட, அதைத் திரையரங்கு அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்துவதால், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு உரிமத் தொகை தந்தே ஆக வேண்டும்.

இவ்வாறு திரை அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்தப்படும்போது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப, அதில் தொடர்புடைய கலைஞர்களுக்கும் தரப்பட வேண்டிய உரிமத் தொகையை காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்யும்போது, தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, அக்காட்சிகள் இடம்பெறும் ஸ்லாட்-ன் மொத்த விளம்பர வருவாயையும் கணக்கில்கொண்டு அதற்கேற்ப உரிமத்தொகையை (ராயல்டி) நிர்ணயிக்க வகை செய்தால், கலைஞர்களுக்கு ஓரளவு நியாயமான உரிமத்தொகை கிடைக்கும்.

படங்களை ரீ-மேக் செய்யும்போதும், பாடல்களை ரீ-மிக்ஸ் செய்யும்போதும்கூட தொடர்புடைய கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்களின் அனுமதி பெறவும் உரிமத்தொகை தரவும் வேண்டும் என்கின்றது சட்டம். திரைத்துறையினரை மனதில் கொண்டே இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து புதிய கதை கருவைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது வரை, கற்பனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது. புதிய கதையைப் படமாக்கும் துணிவு இல்லாத போக்கு தலைதூக்கி இருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்திருப்பது சுயசிந்தனையாளர்களின் திறமைக்குத் தரப்படும் மரியாதை. இருப்பினும் திரைத்துறையினரின் ஒற்றுமை மட்டுமே இந்தச் சட்டத்தை வலுவாக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

திங்கள், 26 மார்ச், 2012

திண்டுக்கல்லில் போட்டோஷாப் சிஎஸ்6 –

திண்டுக்கல்லில் போட்டோஷாப் சிஎஸ்6 –
இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்
திண்டுக்கல் பீஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்ஸ் அசோயேசன் இணைந்து தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். புகைப்படத்துறையினருக்காக நடத்தப்பட்ட பல்வேறு வகுப்புகளில், அடோபி போட்டோஷாப் சிஎஸ்5 மென்பொருளுக்காக 2 நாள் பயிற்சி வகுப்புகள் 23 மற்றும் 24, மார்ச், 2012 தேதிகளில் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலகத்தின் திரு. ஜெ.வீரநாதன் மற்றும் ஆசிரியை செல்வி ரேணுகாதேவி ஆகியோர் பயிற்சியளித்தனர். எல்சிடி புரஜெக்டர் உதவியுடன் பெரிய திரையில் போட்டோஷாப்பின் அனைத்து கருவிகள் கட்டளைகள் பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டது. கலந்துகொண்டவர்களின் எல்லா கேள்விகளுக்கும் செயல்முறையாக விளக்கம் தரப்பட்டது.
இரண்டு நாள் நிகழ்ச்சியின் துவக்கத்தில், ஜெ.வீரநாதன் எழுதி பதிப்பித்துள்ள போட்டோஷாப் சிஎஸ்6 என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத் தலைவர் திரு. ராஜராஜன் புத்தகத்தை வெளியிட துணைத் தலைவர் திரு. அர்ஜுனன் பெற்றுக்கொண்டார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தப் புத்தகம் சிறப்புத் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. பால்ராஜ் அவர்கள் நன்றிகூறினார். திண்டுக்கல் பீஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியின் திரு. பீ.எஸ்.வெங்கடேஷ்வரன் அவர்கள் இரண்டுநாள் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


 

திங்கள், 5 மார்ச், 2012

சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாராட்டு

சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாராட்டு
 
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறந்த அறிவியல் மற்றும் ஆன்மிக தமிழ் நூல்களுக்கு "ராமமூர்த்தி நினைவு விருது' பெற்றவர
 
சென்னை, மார்ச் 5: சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாரட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
 இதில் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதன் ஆசிரியர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.வி.பதியின் "மனதை மயக்கும் கண்ணனின் கதைகள்', ஜெ. வீரநாதனின் "எளிய தமிழில் இணையத்தை அறிவோம்', பி. முத்துகுமாரசுவாமியின் "நகரத்தார் கோயில்களில் ஒன்பது', வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் "எல்லோருக்கும் எப்போதும் உணவு' ஆகிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு "ராமமூர்த்தி நினைவு' விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, இந்தியா சிமெண்ட் நிறுவன துணைத் தலைவர் (நிதி) ஹரிஹர சுப்பிரமணியன், பவித்ரம் நிர்வாகி எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், கெüரவ ஆலோசகர் டாக்டர் ஜெ. ஜாய்ஸ் திலகம், நாடக ஆசிரியர் சி.வி. சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வியாழன், 1 மார்ச், 2012

நமது புத்தகத்திற்கு பரிசு

அன்புடையீர் வணக்கம்.நமது பயிலகம் வெளியிட்டுள்ள இணையத்தை அறிவோம் என்ற நூலுக்கு, அறிவியல் பிரிவில் சிறந்த நூலுக்காக சென்னை Pavithram Trust வழங்கும் Ramamurthi Memorial Award இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்‌ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்தப் புத்தகம், 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை புத்தக் கண்காட்சியில், முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ ஐயா அவர்களால் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார்கள்.

புதன், 9 நவம்பர், 2011

ஏன் இன்டிசைன்...?


ஏன் இன்டிசைன்...?
கணினி வரைகலையில் குறிப்பாக புத்தக வேலைகளுக்கான பக்க வடிவமைப்பிற்காக பயன்பாட்டில் இருந்துவந்த, தற்போதும் பயன்படுத்திக் கொண்டுள்ள அடோபி நிறுவனத்தின் பேஜ்மேக்கர் மென்பொருளில், ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் களைந்து, இன்னும் அதிகமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டதே இந்த இன்டிசைன் மென்பொருளாகும்.
பக்க வடிவமைப்பு மட்டுமல்லாமல், வெக்டார் வகையிலான படங்களையும் உருவாக்க இந்த இன்டிசைன் மென்பொருளில் பல வசதிகள் உள்ளன. அத்துடன் தலைப்பு எழுத்துக்களை அழகுபடுத்துவது, பின்புலனாக வண்ணங்களை நிறுத்துவது உள்ளிட்ட ஏராளமான, வரைகலை அம்சங்கள் இன்டிசைனிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.
அச்சுத்துறைக்கென்றே, அச்சுத்துறைக்குத் தேவையான, அதில் பயன்படுத்தப்பட்டுவரும் பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதாகவும் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அச்சுத்துறையில் தற்போது புழக்கத்தில் உள்ள பாலிமாஸ்டர் வேலைகளிலிருந்து கம்ப்யூட்டர் டூ பிளேட் வகையான வேலைகள் அல்லாமல், நேரடியாக கம்ப்யூட்டர் டூ பிரிண்ட் தருகின்ற டிஜிட்டல் பிரிண்டிங் வரையிலான வேலைகளும் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஏற்ற பல செயல்பாடுகள் இன்டிசைனில் உள்ளன.
அத்துடன் தற்போது பெரிய அளவில் பேசப்படுவதுடன், செயல்பாட்டிலும் கொண்டுவரப்பட்டுள்ள ஈ-பப்ளிகேஷன் எனப்படும் மின் பதிப்பு முறைக்குத் தேவையான மின்னூல்களை (-புக்ஸ்) உருவாக்குவதற்கு வேண்டிய பல்வேறு வசதிகள் இந்த இன்டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த மின்னூலுக்கு அடிப்படையான போர்டபிள் டாக்குமென்ட் ஃபார்மேட் எனப்படும் பீடிஎஃப் வகை கோப்புகளை உருவாக்குவது என்பது இன்டிசைனில் மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக சிறப்புக் கட்டளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனந்தவிகடன் குழுமத்தின் அனைத்து இதழ்கள் மற்றும்  குமுதம் உள்ளிட்ட பல்வேறு வார இதழ்களும், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களும் தற்போது இன்டிசைனை பயன்படுத்தியே தங்களது வடிவமைப்பை செய்து முடிக்கின்றனர். மேலும் சென்னையில் கணினி வரைகலை வடிவமைப்பாளர்களிடையே இந்த இன்டிசைன் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது.
2000ஆவது வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இன்டிசைனின் 1வது பதிப்பைத் தொடர்ந்து தற்போது 6வது பதிப்பு இன்டிசைன் சிஎஸ்4 என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் இதன் 10ஆவது ஆண்டு நிறைவில், 12-04-2010 அன்று 7வது பதிப்பு சிஎஸ் 5 என்றும் வெளியிடப்பட்டு இப்போது சிஎஸ்6 பதிப்பு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அச்சுத்துறைக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இன்டிசைனை முறையாக பயின்று பலனடைவதற்காகவே நமது பயிலகம் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சியின் முடிவில், தற்போது பயன்பாட்டில் உள்ள பேஜ்மேக்கர் மற்றும் கோரல்டிரா ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து இன்டிசைனை மட்டும் பயன்படுத்த முடியும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருளில் உள்ள குறைபாடுகள் :
-    அதிக பக்கங்கள் உள்ள வேலையை சேவ் செய்து வைத்திருந்தால், மறுபடியும் துவக்கம்போது, தொல்லை தருகிறது.
-    தானாக பக்க எண்கள் அமைப்பு கொடுப்பது கடினமானது.
-    ஒரே வேலையில் வேறு வேறு தொடர்ச்சியான பக்க எண்கள் வரவழைப்பது இயலாது.
-    ஒரு முறை நிறுத்திய படத்தை மாற்றுவதற்கு, அல்லது மாற்றங்கள் கொடுப்பதற்கு அதனை டெலிட் செய்துவிட்டு மீண்டும் இம்போர்ட் செய்தே நிறுத்த வேண்டும்.
-    நமது வேலையில் உள்ள தவறுகளை அறிய முடியாது.
-    வேரியபிள் டேட்டா என்பது மிகவும் குறைவான அளவிலேயே செயல்படுகிறது. இதனால் அடையாள அட்டை போன்ற புகைப்படங்களை இணைக்கும் வேலைகளைச் செய்ய முடிவது இல்லை.
-    திரையில் காட்டப்படும் வண்ணங்களும் அச்சில் கிடைக்கும் வண்ணமும் வேறுவேறாக உள்ளன.
-    -புக் எனப்படும் மின்னூல் உருவாக்கத்திற்குத் தேவையான பல வசதிகள் கிடையாது. பீடிஎஃப்பாக மட்டும் மாற்ற முடியும். அனிமேஷன் வசதிகள் கொடுக்க முடியாது.
-    இணையப் பக்க வடிவமைப்பிற்காக செயல்படுவது சிரமம்.
-    ஆட்டோபேக்கப் மற்றும் பேக்கப் நடக்கும்போது வேறு செயல்களைச் செய்ய முடியாது.
-    பேக்கப் நடக்கும்போது மின்தடை ஏற்பட்டால் ஃபைலே கரெப்ட்டாகிவிடுவதும் உண்டு. அதாவது செய்து வைத்த வேலை முற்றிலுமாகக் கொட்டுப் போகிறது.
-    இரவு வேலையை முடித்துவிட்டு மறுநாள் காலை ஃபைலைத் துவக்கினால் வெள்ளையாக ஒரு பக்கம் மட்டுமே காட்டப்படும் நிலை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஃபைல் சைஸ் அதே அளவு உள்ளது.
-    வேலை செய்து கொண்டிருக்கும்போது டெர்மினேட் ஆனால், அதுவரை செய்தவை டெலிட் ஆகிவிடுகின்றன.
இதுபோன்ற தொல்லைகள் எதுவும் இன்டிசைனில் கிடையாது.
 குறிப்பு : நாம் இன்டிசைனை சந்தைப்படுத்துவதற்காகவோ, விளம்பரப்படுத்து வதற்காகவோ அதற்குப் பரிந்து பேசவில்லை. எங்களது புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் பிற வடிவமைப்புகளை இன்டிசைனிலேயே தயாரிக்கின்றோம். எளிமையாகவும் முழுமையாகவும் உள்ளது. யாமறிந்த மென்பொருட்களில் இன்டிசைனைப் போல எளிதானதெங்கும் காணோம் என்பதாலும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தினாலும் இதனைக் கொடுக்கின்றோம்.
வடிவமைப்பாளர்கள் கிடைக்காத இந்த நாட்களில், உரிமையாளர்கள் எளிதாக பயிலுவதற்கு இதுவே மிகப் பொருத்தமான மென்பொருளாகும்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

பார்கோடு (BarCode)

­பார்கோடு – அடிப்படை செய்திகள்
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடுதான் பார்கோடுஎனப்படும் வசதியாகும். நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கையும், அளவும் அதிகரித்துவரும் இந்த நாட்களில், சந்தையில் அவற்றை கையாளும் ஆட்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. அதாவது விற்பனை நிலையங்களில் வேலைபார்க்க சரியான எண்ணிக்கையில் ஆட்கள் கிடைப்பது இல்லை. ஆனால் பரிமாற்றம் மட்டும் அதிகரித்து வருகிறது. எனவே குறைவான எண்ணிக்கையில் உள்ள மனித சக்தியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மனித சக்திக்குத் துணையாக கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
கணினி தொழில்நுட்பம்
ஒரு பொருளின் அளவு, விலை மற்றும் கையிருப்பு ஆகியவற்றை கணினியில் உட்செலுத்தி வைத்துக் கொண்டு தேவையானபோது மட்டும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. வடிவமைப்பில் - குறிப்பாக பேக்கேஜிங் துறைக்கான வடிவமைப்பில் - இந்த பார்கோடுகளை பற்றி அறிந்திருப்பதும் பயன்படுத்துவதும் அவசியமாகிறது. பார்கோடுகளை உருவாக்குவதற்கென தனியான மென்பொருளும், அவற்றை உருவாக்கிக் கொடுக்கும் சேவை நிறுவனங்களும் இருக்கின்றன. பொதுவாகத் தயாரிப்பாளர்கள் இவர்களிடமிருந்தே பார்கோடுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும் கணினி வடிவமைப்பில் பெருமளவு பயன்படுத்தப்படும் கோரல்டிரா (CorelDraw) மென்பெருளிலும் இந்த பார்கோடை உருவாக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் முறையாக உங்கள் கம்ப்யூட்டரில் கோரல்டிரா மென்பொருளை பதிவு செய்யும் பொழுது முழுமையாக, இந்த பார்கோட் பகுதியையும் சேர்த்து பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தக் கட்டளை மங்கிய நிலையிலேயே காணப்படும்; செயல்படாது.
பார்கோடு உருவாக்கம்
இந்தக் கட்டளையை செலக்ட் செய்தவுடன் முதல் டயலாக் பாக்ஸ் வருகிறது
பாகம் 1 ஆகக் காட்டப்பட்டுள்ள பகுதியில் உள்ள ட்ராப் டவுன் லிஸ்ட்டில் பல முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தேவையான முறையை (Industry Standard Format) செலக்ட் செய்யுங்கள். (இந்தியாவில் பொதுவாக EAN-8, EAN-13 ஆகிய இரண்டு முறைகளே பெரும் அளவில் பயன்படுகின்றன. அதாவது எட்டு இலக்கங்கள் அல்லது 13 இலக்கங்களை உடைய குறியீட்டு எண்களை மட்டுமே இங்கு பயன்படுத்துகின்றோம். எனினும் இதில் கொடுத்துள்ள முறைகள் பற்றிய தெளிவான விவரங்களை அறிந்து பயன்படுத்த வேண்டும்.) இங்கு EAN-8 என்ற முறையை செலக்ட் செய்துள்ளோம். இந்த முறையில் கொடுக்க வேண்டிய எண்களை பாகம் 2ல் உள்ள டெக்ஸ்ட் பெட்டிகளில் கொடுக்கவும். தவறாகக் கொடுத்தால் எச்சரிக்கை வந்து நிற்கும்.
பாகம் 3ல் உள்ள சாம்பிள் ப்ரீவ்யூ பெட்டியில் நாம் செலக்ட் செய்துள்ள முறையின் மூலம் கிடைக்கவுள்ள பார்கோடின் வடிவம் காட்டப்படுகிறது. இதனை ஒப்புநோக்கி வேறு வடிவம் தேவையெனில் பாகம் 1ல் வேறு முறையை செலக்ட் செய்து கொள்ளவும். நெக்ஸ்ட் பட்டனை செலக்ட் செய்தால் அடுத்தடுத்து டயலாக் பாக்ஸ்கள் வருகின்றன.
இவற்றில் அச்சிடும் பொழுது இருக்க வேண்டிய தரம் மற்றும் பிற தன்மைகள் பற்றிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. பார்கோடுகள் பற்றிய முழு செய்திகளையும் அறிந்து கொண்டு, வேலையின் தன்மைக்கு ஏற்ப இதில் உள்ள வசதிகளை மாற்றிக் கொடுத்து கடைசியாக வருகின்ற டயலாக் பாக்ஸில் ஃபினிஸ் கொடுத்து முடித்தால், குறிப்பிட்ட முறையில் உங்களது தேவைக்கேற்ற பார்கோடு நிறுத்தப்படுகின்றது. இதனை அளவில் மாற்றம் செய்து பயன்படுத்தலாம். பார்கோடுகள் அவற்றை படித்து அறிகின்ற பார்கோடு ரீடர்களில் சிறப்பாக செயல்பட, தரம் முக்கியமாக தேவைப்படுகிறது. தரம் குறைவானால் தவறான தகவல்கள் தரப்பட்டு விடும். பார்கோடுகள் பொதுவாக இடமிருந்து வலமாகவே பார்கோடு ரீடர்களால் படிக்கப்படுகின்றன. எனவே பார்கோடுகள் உயரமாக இருக்க வேண்டியது இல்லை. அதற்காக நாமாக அகலத்தை பெரிதுபடுத்துவதும் கூடாது. முழுமையான விவரம் அறிந்து செயல்படவேண்டிய மிக முக்கியமான பகுதி.
பல்வேறு வகையான பார்கோடுகள்
சில வகையான பார்கோடுகளை கீழே காண்க.
EAN-8 (7 எண்களை நாம் கொடுக்க, 8வது எண் தானாகக் கொடுக்கப்படுகிறது.)

EAN-8 (கூடுதலாக 5 எண்கள் கொடுக்கலாம்.)

EAN-13 (12 எண்களை நாம் கொடுக்க, 13வது எண் தானாகக் கொடுக்கப்படுகிறது.)

EAN-13 (கூடுதலாக 5 எண்கள் கொடுக்கலாம்.)

ISBN 978 prefix (உலகளவிலான புத்தக எண் - 978 என்பது கொடுக்கப்பட்ட நிலையில்)

ISBN (உலகளவிலான புத்தக எண் மட்டும்)

இப்படி பலவகையான பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர இந்திய அஞ்சல் துறையாலும் பார்கோடு பயன்படுத்தப்படுகிறது. அஞ்சல் குறியீட்டு எண்ணை விரைவாகக் கண்டுபிடித்து கடிதங்களை பிரித்தெடுக்க இது உதவுகிறது.
ஜெ. வீரநாதன்
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்