செவ்வாய், 27 ஜூலை, 2021

 

 

கோயம்புத்தூர், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நடத்தும் எந்தவொரு பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்வதற்கு பின்வரும் நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. இவற்றை முழுவதுமாகப் படித்துப் பார்த்து பொருள் புரிந்து கொண்டு, ஒப்புதல் இருந்தால் மட்டும் கட்டணம் செலுத்தி பயிற்சியில் சேர வேண்டும்.

பயிற்சி வகுப்புகள் இணையம் வழியாக நடத்தப்படும் ஜூம் செயலியை பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. இதற்காக நமது பயிலகம் உரிமம் பெற்ற ஜூம் செயலியையே பயன்படுத்துகிறது. அதனால் வகுப்புகள் தடையில்லாமல் தொடர்ந்து 25 மணி நேரம் நடத்தப்படலாம். எனினும் நமது இணையம் வழிப் பயிற்சி வகுப்புகள் பொதுவாக 30 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை மட்டுமே நடத்தப்படுகிறது. இணையரங்குகள் மட்டும் 60 நிமிடங்கள் முதல் 200 நிமிடங்கள் அல்லது கூடுதலாகவும் நடத்தப்படுகின்றன.

பயிற்சிக்காக ஒரு முறை செலுத்தப்பட்ட கட்டணம் எந்த வகையிலும் திருப்பிப் பெறுவதற்கோ, மாற்றிக் கொள்ளுவதற்கோ, வேறு நபர்களுக்கு மாற்றவோ முடியாது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பயிற்சியில் சரியான கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ள வேண்டும். பயிற்சிக் கட்டணம் செலுத்திய பிறகு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் எந்த வகையிலும் கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது.

பயிற்சியளிக்கும் வழி முறை : குறிப்பிட்ட மென்பொருளின் கருவிகள், கட்டளைகள் ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கப்படும். இதற்காக எங்களால், எங்களது வசதிக்காக உருவாக்கப்பட்ட காணொளி விளக்கங்கள் பயன்படுத்தப்படும். எனினும் நிகழ்ச்சி முழுவதும் விளக்கவுரையாளரும் இணையத் தொடர்பிலேயே உடன் இருப்பார். அந்த வகையில் நிகழ்ச்சி 100% நேரடியான நிகழ்ச்சியாகவே இருக்கும். பங்கேற்பவர்கள் குறிப்பிட்ட மென்பொருள் தொடர்பான தங்களது சந்தேகங்களை நிகழ்ச்சியில் எந்தவொரு நிலையிலும் கேட்டு விளக்கம் பெறலாம். இந்தப் பயிற்சிக்காக உருவாக்கப்படும் டெலிகிராம் குழுவழியாகவும் 2 மாதங்களுக்கு குறிப்பிட்ட மென்பொருள் தொடர்பான உங்களது கேள்விகளுக்குத் தேவையான விளக்கம் கிடைக்கும்.

பிற நிபந்தனைகள் -

கோவை, பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வழங்கும் - இணையம் வழி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் தங்களுக்கு எங்களது நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

குறிப்பிட்ட மென்பொருளுக்கான விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகள், பண்டிகை விடுமுறை நாட்கள், எதிர்பாராத விடுமுறை நாட்களில் மட்டும் வகுப்பு கிடையாது. தேவையென்றால் பயிற்சிக்கான காலம் நீடிக்கப்படலாம்.

விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள நேர முறைப்படி அந்த நேரம் முதல் பயிற்சி நடத்தப்படும்.

தினசரி குறைந்தது 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரையிலும் விளக்கவுரை தரப்படும். நிகழ்ச்சியின் இடையில் தேவையான இடங்களில் குறிப்பிட்ட மென்பொருள் தொடர்பான உங்களது ஐயங்களுக்கு விடை தரப்படும்.

விடுமுறை எடுக்காமல் பயிற்சியில் கலந்து கொண்டு பலன்பெற வேண்டும்.

தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கு 5-10 நிமிடங்கள் முன்பாக ஜூம் இணைப்பில் அட்மிட் துவங்கப்படும்.

விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மிகச் சரியாக வகுப்பு துவங்கிவிடும். தாமதமாக வருவது கூடாது. நிகழ்ச்சியில் இணைவதற்கான எந்தவொரு நினைவூட்டலும் கொடுக்கப்படமாட்டாது. சரியான நேரத்திற்கு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு ஆகும்.

பயிற்சி வகுப்பிற்கான ஜூம் செயலியின் ஐடி - பாஸ்வேர்ட் ஆகியன நிகழ்ச்சி துவங்குவதற்கு முதல் நாள் இரவு அல்லது நிகழ்ச்சி துவங்கும் நாளன்று காலையில் டெலிகிராம் குழு வழியாக மட்டும் பகிரப்படும். பயிற்சியில் இணைபவர்களுக்குத் தனித்தனியாக எந்தவொரு செய்தியும் அனுப்பப்படமாட்டாது.

எங்கள் தரப்பில் இணையத் தொடர்பாலோ அல்லது வேறு எதிர்பாராத நிகழ்வினாலோ பயிற்சியில் தடங்கல் ஏற்பட்டால் அடுத்து வரும் நாட்களில் அது சமன் செய்யப்படும்.

பயிற்சி தொடர்பாக எந்தவொரு காணொளி, ஒலித்துண்டுகள், பாடங்கள் உள்ளிட்டவை பகிரப்படுவதில்லை.

பயிற்சியின் போது தேவையென்றால் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவே உங்களது மைக், ஸ்பீக்கர் ஆகியன செயல்படுவதை உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும். ஜூம் செயலியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் தரப்பட்டுள்ள ஆடியோ பகுதியில் உள்ளவற்றை செயல்படுத்தி அமைப்புகளை சரி செய்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சியின் போது செல்பேசி வழியாக டெலிகிராமில் செய்திகள் அனுப்புவது கூடாது. அனுப்பினாலும் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அவற்றை பார்த்து பதில் தரமுடியும். நிகழ்ச்சியின்போது வேறு எதிலும் கவனத்தை செலுத்து முடியாது.

தேவையென்றால் ஜூம் செயலியில் உள்ள சாட் பகுதி வழியே தகவல் தரலாம். அல்லது ஹேண்ட் ரைஸ் குறியை வெளியிடலாம். எனினும் இடையில் தகுந்த வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே உங்களது கேள்விகளுக்கு பதில் தரமுடியும். என்றாலும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவும் பயிற்சி விளக்கம் முடிந்த பிறகும் உங்களது ஐயங்களுக்கு விடை தர முடியும்.

Never Stop Listening...

Never Stop Learning...

Never Stop Training.

வாருங்கள் இணைந்தே பயிலுவோம்... வளருவோம்.

குறிப்பிட்ட மென்பொருளுக்காகத் துவங்கப்படும் டெலிகிராம் குழுவிலும் இந்த நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் வெளியிடப்படும்.

இங்கு வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் மாறுதலுக்கு உட்பட்டவை.

இந்த நிகழ்ச்சிகள் மற்றும் இது தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் கோயம்புத்தூர் நகர சட்ட எல்லைக்குட்பட்டவை.

எங்களது தொடர்பு முகவரி -

Balaji Institute of Computer Graphics

167, Police Kandasamy Street, Olympus, Ramanathapuram

Coimbatore - 641 045, Phone : 0422-2323228, Cell : 98422 13782

E-mail : balajiicg@yahoo.com, Web : www.veeranathan.com

ஜி-பே, போன் பே, பேடீஎம் - இணைப்பு செல்பேசி எண் - 9842213782

செவ்வாய், 7 ஜூலை, 2020

பயிற்சி வகுப்புகள் விவரம் - ஜூலை 2020

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ்
இராமநாதபுரம், கோயம்புத்தூர் - 641 045
தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி - 91+422 2323228
செல்பேசி - 098422-13782
மின்னஞ்சல் - balajiicg@yahoo.com
வலைதளம் - www.veeranathan.com
வலைப்பதிவு - bicg2020.blogspot.com




துவக்கம்

2004ஆம் ஆண்டு கணினி வரைகலைக்குப் பயிற்சி அளிப்பதற்காகவென்றே தனிப்பட்ட நிலையில் துவக்கப்பட்டது (Only and exclusive Training Center for Computer Graphic Designing). இங்கு வேறு எந்த வகையான கணினி பயிற்சியும் தரப்படுவது இல்லை.

அச்சு, விளம்பரம், புகைப்படம், புத்தகப் பதிப்பு மற்றும் பதாகை ஆகிய துறைகளில் (Printing, Advertising, Photography, Book Publication & Flex Printing) பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் முழுமையான பயிற்சி தரப்படுகிறது.

மென்பொருட்கள்

துவக்க நாட்களில் பேஜ்மேக்கர், கோரல்டிரா மற்றும் போட்டோஷாப் ஆகிய மென்பொருட்களில் மட்டுமே பயிற்சி தரப்பட்டது.

தற்போது (2020) பேஜ்மேக்கர், இன்டிசைன், போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், கோரல்டிரா, எம்.எஸ்.ஆபீஸ், பிரீமியர் ஆகிய (PageMaker, InDesign, PhotoShop, Illustrator, CorelDraw, MS Office, Premier) தொழில் முறை மென்பொருட்களிலும், இங்க்ஸ்கேப், ஜிம்ப், லிப்ரே (InkScape, GIMP, Libre) ஆகிய கட்டற்ற மென்பொருட்களிலும் பயிற்சி தரப்படுகிறது.

பயிற்சி முறை

ஒவ்வொரு மென்பொருளுக்கும் தனித்தனியான பயிற்சி தரப்படுகிறது. ஒரு நபர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருளில் பயிற்சி எடுக்க முடியாது. இதனால் பயிற்சி எடுக்கும் மென்பொருளில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

நமது பயிற்சியில் பாட வகுப்பு மற்றும் செயல்முறை வகுப்பு என்ற இரண்டு பகுதிகளும் உண்டு. மொத்த பயிற்சிக்காலத்தில்  பாட வகுப்பு 20 சதவீதமும் 80 சதவீதம் செயல்முறை பயிற்சியாகவும் தரப்படுகின்றன. இதனால் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மென்பொருளிலும் அதிக நேரத்திற்கு செயல்முறை பயிற்சி பெறுகின்றனர்.

பாட வகுப்பிற்கு, நமதபயிலகத்திற்காக, நமது பயிலகத்திலேயே, நமது பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட காணொளி பாடங்கள் (வீடியோ) வழியே விளக்கங்கள் தரப்படுகின்றன. இதனால் புரியாத பகுதிகளையும் ஒன்றிற்கு இருமுறை அல்லது புரியும் வரையிலும் பார்த்து தெளிவடைய முடிகிறது. பயிற்சியாளர்களாலேயே தேவையானபடி இயக்கிப் பார்க்க முடிவதால், காணொளி பாடத்தைப் பார்த்துக் குறிப்புகள் எடுத்துக் கொள்ளவும் முடிகிறது.

இதற்குப் பிறகும் பயிற்சியாளர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகள் உடனடியாக, செயல்முறை விளக்கத்துடன் தீர்த்து வைக்கப்படுகின்றன.

நேரில் வந்து பயிற்சி எடுப்பவர்களுக்கு பயிற்சியின் இறுதியில், பயிற்சி முடித்தமைக்கான சான்றிதழ் (Course Completion Certificate) மற்றும் அச்சிட்ட புத்தகம் ஆகியன வழங்கப்படுகின்றன.

பயிற்சி வகைகள்
  1. கோவையில் உள்ள நமது பயிலகத்திற்கு நேரில் வந்து பயிற்சி எடுப்பதே முதன்மையான சிறந்த வழிமுறையாகும். இதனால் தவிர்க்க முடியாத, கட்டாயமான அதிக நேர செயல்முறை பயிற்சி கிடைக்கிறது. (நமது பயிலகத்திலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நல்ல தங்கும் விடுதிகளும் உணவகங்களும் உள்ளன. பெண்கள் உட்பட பயிற்சிக்கு வருபவர்கள் இங்கேயே தங்கிப் பயிற்சி முடித்து செல்லுகின்றன. 3 கிமீ தூரத்தில் தொடரி நிலையம் மற்றும் 5 கிமீ தூரத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகிலும் நிறைய தங்கும் விடுதிகள் தினசரி வாடகை ரூ. 450 முதல் கிடைக்கின்றன. பஸ் வசதி நிறைய உள்ளது.)
  2. இணையம் வழியாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனி ஒருவருக்காக, நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு என்று இரண்டு வகைகளிலும் பயிற்சி தரப்படுகிறது. தற்போது ஜூம் செயலி வழியே செயல்முறை விளக்கத்துடன் கூடிய காணொளி பாடங்கள் வழியே பயிற்சி தரப்படுகிறது. கூடுதலாக பயிற்சியாளர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்க தனியாக செயல்முறையான விளக்கத்துடன் கூடிய கேள்வி பதில் பகுதியாகவும் நடத்தப்படுகிறது.
  3. மேற்கொண்டு விவரங்கள் தேவையெனில் தயங்காமல் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி காலம்

  • நமது பயிலகத்திற்கு நேரில் வந்து பயிற்சி எடுக்கும்போது ஒவ்வொரு மென்பொருளுக்கும் குறைந்த பட்சம் 40 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பாட வகுப்பும், செயல்முறை வகுப்பும் முறையே 20 - 80 என்ற சதவீத அடிப்படையில் நடத்தப்படுகின்றன.

  • இணையம் வழியே நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் 6 முதல் 15 நாட்கள் வரையிலும் நடத்தப்படுகின்றன.
  • கலந்து கொள்ளும் நபர்களின் ஈடுபாடு, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்கள் மாறுகின்றன.
  • இதில் தினசரி 20 முதல் 60 நிமிடங்கள் வரையிலும் செயல்முறை பாடவகுப்புகள் காணொளி பாடங்கள் வழியாகவும், சில மென்பொருட்களுக்கு நேரடி செயல்முறை விளக்கவுரையாகவும் நடத்தப்படுகின்றன.
  • தினசரி இறுதி நிகழ்ச்சியாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதனால் பயிற்சியாளர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகள் அன்றன்றே நீக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு பயிற்சியும் முடிந்த பிறகு, குறைந்தது ஒரு வார கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு மணி நேரம் கேள்வி - பதில் வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் பயிற்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகளுக்கு விளக்கம் தரப்படுகிறது.
  • தொடர்ந்து வரும் நாட்களில் ஏற்படும் ஐயங்களை டெலிகிராம் செயலி வழியே அனுப்பி பதில் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிக் கட்டணம்

  • நமது பயிற்சி வகுப்புகளுக்கான கட்டண முறை மாறுதலுக்குட்பட்டது. எனவே கட்டண விவரம் அறிய தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
  • கோவையில் நமது பயிலகத்தில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் - ஒவ்வொரு மென்பொருளுக்கும் தனித்தனியே 40 மணி நேர பயிற்சிக்கு ரூ. 15 ஆயிரம் மட்டும் கட்டணமாகும்.
  • இணையம் வழியாக 10 முதல் 15 நாட்கள் வரையிலும் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு ரூ. 1900 முதல் ரூ. 10 ஆயிரம் வரை கட்டணம் ஆகும்.
  • இவையே இறுதி அல்ல. மாறுதலுக்குட்பட்டவையாகும்.

பயிற்சி தொடர்பாக வேறு ஐயப்பாடுகளுக்கு பதில் தேவையென்றால் எங்களைத் தயக்கமின்றி தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். நன்றி.

சனி, 6 அக்டோபர், 2012

கோவை திரு. ஜெ. வீரநாதன் உள்ளிட்ட 16 படைப்பாளிகளுக்கு கு.சி.பா. அறக்கட்டளை விருது அளிப்பு



கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலக ஆசிரியர் திரு. ஜெ. வீரநாதன், சென்னை ஜெம் கிரானைட்ஸ் அதிபர் திரு. வீரமணி அவர்களிடமிருந்து நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் கணினித் தமிழ் நூல் விருது பெறுகிறார். தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன், எழுத்தாளர் திரு. கு. சின்னப்பபாரதி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி. சுப்ரமணியன், அறக்கட்டளை தலைவர் மற்றும் கல்லூரி தாளாளர் டாக்டர் பொ. செல்வராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.
நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், கு. சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை சார்பில், 16 படைப்பாளிகளுக்கு சிறப்பு விருதும், தலா ரூ.10,000 பொற்கிழியும் வழங்கப்பட்டன.
இந்த இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார்.
உலக சமுதாய சேவா சங்க சேலம் மண்டலத் தலைவர் உழவன் ம.தங்கவேல், சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளைச் செயலர் கா.பழனிச்சாமி தொடக்க உரையாற்றினார். விழாவில், முதன்மை விருதுடன், ரூ.1.50 லட்சம் பொற்கிழி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது. விருதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், சிறந்த நூல்கள் எழுதிய வகையில் சிறுகதைப் பிரிவில் (அடைப்புக் குறிக்குள் நூல்களின் பெயர்கள்), கனடாவைச் சேர்ந்த அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் (கூடுகள் சிதைந்த போது), சிங்கப்பூர் மா.அன்பழகன் (என் வானம் நான் மேகம்), கவிதைப் பிரிவில் நாமக்கல் கா.ஜெய்கணேஷ் (நட்பின் முகவரி), பிரான்ஸ் பத்மாராணி இளங்கோவன் (சிறுவர் இலக்கியம்), இலங்கை டாக்டர் ஓ.கே.குணநாதன் (பறக்கும் ஆமை), நாவல் பிரிவில் கன்னியாகுமரி மலர்விழி (தூப்புக்காரி), அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிங்காரவடிவேல் (ஆத்தா கல்லறையில் ஒரு ஆவாரஞ்செடி), கட்டுரைப் பிரிவில் ஈரோடு புலவர் செ.ராசு (வாழ்நாள் சாதனை விருது), மலேசியா ராஜம் ராஜேந்திரன் (மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்), லண்டன் சிவ.தியாகராஜா (தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்), சிற்றிதழ் பிரிவில் இலங்கை கலாமணி பரணீதரன் (ஜீவநதி), கணினித் தமிழ்ப் பிரிவில் கோவை ஜெ.வீரநாதன் (இணையத்தை அறிவோம்), மொழி பெயர்ப்புப் பிரிவில் திருச்சி இலக்குவன் திருவரங்கம் (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - இஎம்எஸ் நம்பூதிரிபாட்), சென்னை ஆர்.சௌரிராஜன் (கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு), இலங்கை உபாலி லீலாரத்ன (கு.சி.பா. சர்க்கரை நூல் மொழி பெயர்ப்பு), உஸ்பெகிஸ்தான் லோலா.மக்துபா (கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு) ஆகிய 16 எழுத்தாளர்களுக்கு தலா 10 ஆயிரத்துடன் பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி வழங்கினார்.
இந்த விருதுகளுக்கு மொத்தம் 401 படைப்புகள் வரப்பெற்றதில் சிறந்த 16 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, விழா மலரை சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கே.முத்துச்செழியன் வெளியிட, அதை லண்டன் எழுத்தாளர் ரா.உதயணன் பெற்றுக் கொண்டார்.
மேலும், எழுத்தாளர் லோலாமக்துபா உஸ்பெகிஸ்தான் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பாவின் "பவளாயி' புதினத்தின் முதல் பிரதியை புதுதில்லி மொழி பெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

உபாலி லீலாரத்னா சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பா.வின் "சர்க்கரை' என்னும் புதினத்தின் முதல் பிரதியை இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா பெற்றுக் கொண்டார். இவ்விரு புதினங்களையும் நீதிபதி ராமசுப்பிரணியன் வெளியிட்டார். தொடர்ந்து, எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செல்வம் கல்வி நிறுவனங்களின் செயலர் கவீத்ராநந்தினி பாபு வரவேற்றார்.
அறக்கட்டளை உறுப்பினர் சி.ரங்கசாமி நன்றி கூறினார்.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நா.செந்தில்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.

புதன், 6 ஜூன், 2012

படைப்புக்கு மரியாதை!


தினமணி தலையங்கம்: படைப்புக்கு மரியாதை!

First Published : 25 May 2012 01:50:14 AM IST

நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு 2012ஆம் ஆண்டு நல்ல காலம் பிறந்திருக்கிறது. படைப்புரிமை சட்டத் திருத்தம்-2012 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமனதாக நிறைவேறியுள்ளது. திரைப்படத் துறையினரின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் இது. இதில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே விஷயம், இந்த நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான்.

திரைத்துறையில் ஒரு நடிகர் நடிக்கவும், பாடலாசிரியர் பாட்டு எழுதித் தரவும், இசையமைப்பாளர் இசை அமைத்துக் கொடுக்கவும் அவர்கள் கேட்கும் தொகை தயாரிப்பாளரால் அளிக்கப்பட்டுவிடுவதால், அது தொடர்பாக எந்த உரிமையும் படைப்பாளிகள் அல்லது நடிகர்களுக்கு இல்லை என்பதுதான் படைப்புரிமைச் சட்டம் 1957-ன்படி நடைமுறையாக இருந்தது. இப்போதைய சட்டம் இந்த நடைமுறையில் சிறு திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரு கலைஞன் அல்லது கவிஞன், இசைஞன் காலத்தால் கைவிடப்பட்டாலும், அவன் படைப்பு உயிர்ப்புடன் இருக்கும்வரை அக் கலைஞனுக்கு உரிமத் தொகை மிகச்சிறிய அளவாக இருந்தாலும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்தச் சிறந்த கலைஞன் வறுமையில் சாகமாட்டான். திரைப்படத் துறையில் பணியாற்றியவர்களால் எழுத்துலக படைப்பாளிகள் போல, உரிமத்தொகை பெற முடியாமல் இருந்துவந்த நிலைமை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

திரைப்படங்களைப் பொருத்தவரை, அதன் தயாரிப்பாளர் மட்டுமே உரிமை படைத்தவர் என்பதால், அந்தத் திரைப்படம் எத்தனை முறை, எத்தனை தியேட்டர்களில் ஓடினாலும் அவருக்குத்தான் லாபம். அந்தப் படத்தை சில ஆண்டுகள் கழித்து ரீ-பிரிண்ட் போட்டு ஓட்டினாலும் அவருக்கே அந்த லாபம் முழுவதும்.

உதாரணமாக, "கர்ணன்' படத்தை டிஜிட்டலாக மாற்றினாலும் அதன் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே சொந்தம். அல்லது தயாரிப்பாளரிடமிருந்து உலக விநியோக உரிமையை முழுவதுமாகப் பெற்ற விநியோகஸ்தருக்குச் சொந்தம். இதுதான் இன்று வரை உள்ள நிலைமை. இனி அப்படியல்ல. ஒரு படத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினாலும், கருப்பு - வெள்ளைப் படத்தை வண்ணமாக மாற்றினாலும், இணைய தளத்தில் வெளியிட்டாலும், அதாவது, திரைக்கு வெளியே எந்த வடிவம் கொண்டாலும், மாற்றம் பெற்றாலும், அதில் தொடர்புடைய கலைஞர்கள் உரிமத்தொகை பெறும் தகுதியுடைவர்கள் ஆகிறார்கள்.

வானொலி, தூர்தர்ஷனில் ஒலி, ஒளிபரப்பாகும் திரைப்பாடல்கள், ஒலிச் சித்திரம், திரைப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் குறித்து அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியன கணக்கு வைத்திருக்கின்றன. இவை பயன்படுத்தப்பட்ட மணித்துளிகளுக்கேற்ப, அதன் தயாரிப்பாளர்களுக்குக் காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் இந்த இரு நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை.

தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் பெருகிய பின்னர், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் தனியார் தொலைக்காட்சிகளே வாங்கி, அப்படத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் - பாடல், நகைச்சுவைக் காட்சி அல்லது முழு திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும், தங்கள் துணை சேனல்களிலும் ஒளிபரப்பும் புதிய வணிக முறை தோன்றியது.

ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.80 கோடி என்றாலும், அந்தப் படத்தை ரூ.100 கோடிக்கு வாங்கி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது அவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பல கோடி ரூபாய். இரண்டு ஒளிபரப்பில் இந்த ரூ.100 கோடியை மீட்டுவிட முடியும். ஆகவே, ஒரு படத்தின் பல காட்சிகளை, பாடலை பலமுறை ஒளிபரப்பி, விளம்பரங்கள் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கத் தனியார் தொலைக்காட்சிகளால் முடிந்தது.

தற்போது இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருப்பதன் மூலம், அத்தகைய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்களே அந்தப் படத்துக்கு உரிமை பெற்றவர்களாக இருந்தாலும்கூட, அதைத் திரையரங்கு அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்துவதால், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு உரிமத் தொகை தந்தே ஆக வேண்டும்.

இவ்வாறு திரை அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்தப்படும்போது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப, அதில் தொடர்புடைய கலைஞர்களுக்கும் தரப்பட வேண்டிய உரிமத் தொகையை காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்யும்போது, தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, அக்காட்சிகள் இடம்பெறும் ஸ்லாட்-ன் மொத்த விளம்பர வருவாயையும் கணக்கில்கொண்டு அதற்கேற்ப உரிமத்தொகையை (ராயல்டி) நிர்ணயிக்க வகை செய்தால், கலைஞர்களுக்கு ஓரளவு நியாயமான உரிமத்தொகை கிடைக்கும்.

படங்களை ரீ-மேக் செய்யும்போதும், பாடல்களை ரீ-மிக்ஸ் செய்யும்போதும்கூட தொடர்புடைய கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்களின் அனுமதி பெறவும் உரிமத்தொகை தரவும் வேண்டும் என்கின்றது சட்டம். திரைத்துறையினரை மனதில் கொண்டே இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து புதிய கதை கருவைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது வரை, கற்பனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது. புதிய கதையைப் படமாக்கும் துணிவு இல்லாத போக்கு தலைதூக்கி இருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்திருப்பது சுயசிந்தனையாளர்களின் திறமைக்குத் தரப்படும் மரியாதை. இருப்பினும் திரைத்துறையினரின் ஒற்றுமை மட்டுமே இந்தச் சட்டத்தை வலுவாக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.