இன்டிசைன் - 2 நாள் பயிற்சி வகுப்புகள்!
பதிப்புத்துறைக்கான வேலைகளைச் செய்து முடிக்க உதவுகின்ற மென்பொருள் அடோபி இன்டிசைன் என்பதாகும். தற்போது புழக்கத்தில் உள்ள சிஎஸ்4 என்ற தொகுப்பில் இதன் 6வது பதிப்பு தரப்பட்டு உள்ளது. இதன் 7வது பதிப்பும் சிஎஸ்5 என்று தொகுப்பில் வெளியிடப்பட்டு விட்டது.
இந்த மென்பொருளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்புகள் 2010, நவம்பர் மாதம் 27 சனி மற்றும் 28 ஞாயிறு ஆகிய இருதினங்கள் கோயம்புத்தூர் திவ்யோதயா மையத்தில் உள்ள மஹாத்மா காந்தி அரங்கில் நடைபெற்றது. துவக்கத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகளை, இராமநாதபுரத்தில் உள்ள நமது பயிலகத்தில் நடத்தவே முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிக எண்ணிக்கையில் பயிற்சியாளர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்ததால், நிகழிடத்தை மாற்றியமைத்தோம்.
கோவை நகரத்திலிருந்து மட்டுமல்லாது, ஆரணி
, காஞ்சிபுரம் அருகேயுள்ள நரசிங்கப் பெருமாள் கோயில், உடுமலை ஆகிய ஊர்களிலிருந்தும் அச்சக நண்பர்கள் பெயர் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக நமது கணினி வரைகலையின் சங்கமம் இதழ் வழியாக தகவல் பெற்றவர்களும் இதில் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இரண்டாம் நாள் பங்கு பெற்றோரின் கருத்துக்கள் ஒரு விண்ணப்பம் வடிவில் பெறப்பட்டது. அதில் கேட்கப்பட்டிருந்த பங்குபெற்றோருக்குக் கிடைத்த விளக்கங்கள், நிகழிடம், சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட அளவு, பயிற்சிக் கட்டணம் உள்ளிட்ட 16 கேள்விகளுக்கு பெருவாரியாக நேர்மறையான பதிலே கொடுக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் நாள் மாலை கோயம்புத்தூர் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் திரு. சி.டி.குமாரவேல் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்குபெற்றோருக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தனது உரையில் அவர், "இந்திய அளவில் கணினி வரைகலை வடிவமைப் பாளர்களுக்குத் தேவை மிக அதிகமாக உள்ளது. பள்ளிகளிலேயே இதனை ஒரு பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய அச்சகதாரர் பேரவை மூலமாக நடுவண் அரசுக்குக் கோரிக்கையாக வைத்துள்ளோம். இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன்மூலம் நாமே தற்காலிகமாக நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது" என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த பயிற்சி வகுப்புகளின் தொடர்ச்சியாக, பங்குபெற்றோரின் வசதிக்கேற்ப, ஒரு சனிக்கிழமை நாளில் (நம்மிடம் முன்பதிவு செய்து கொண்டு) நமது பயிலகத்திற்கு நேரில் வந்து செயல்முறையாகத் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள் முழுமையாகவும், பங்குபெற்றோருக்கு பயனளிக்கும் வகையிலும், மனநிறைவடையும் அளவிற்கு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டு நாளும் காலை மாலை தேநீர், மதிய உணவு ஆகியன நிகழிடத்திலேயே வழங்கப்பட்டது. மேலும் பயிற்சிக் குறிப்பேடு, இன்டிசைன் புத்தகம் ஆகியனவும் பங்கு பெற்றோருக்கு வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கணினி வரைகலை யில் பயன்படுத்தப்படும் கோரல்டிரா, போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர் போன்ற மென்பொருட்களுக்கும் பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவை உங்களுக்காக நடத்தப்படுகின்ற நிகழ்வுகள். அனைவரும் பங்குபெற்று பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக